கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் தேர் திருவிழா
மோகனுார், நாமக்கல், மோகனுாரில் பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருத்தேர் பெருவிழா, 2018 முதல் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, கடந்த, 24ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் வரை, தினமும் காலை பல்லக்கு புறப்பாடு, இரவு, 7:00 மணிக்கு, அன்னம், சிம்மம், ஹனுமந்த, சேஷ, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அதிகாலை, 5:15 மணிக்கு, ரதாரோஹணம் திருத்தேர் பெருவிழாவும், காலை, 9:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, கோவிலை நிலை அடைந்தது. மோகனுார் டவுன் பஞ்., தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார், முன்னாள் தலைவர் உடையவர், அட்மா தலைவர் நவலடி, கவுன்சிலர் செல்லவேல், அறங்காவலர் குழு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.