காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு; டூவீலர் ஸ்டாண்டில் பார்க்கிங் கட்டணம் அடாவடி வசூல்
நாமக்கல்: நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில், 'டூவீலர் பார்க்கிங்' கட்டணத்தை குறைத்து வசூலிக்க கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, மீண்டும் அடாவடி வசூலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நடுத்தர மக்களான வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.நாமக்கல், முதலைப்பட்டியில் மாநகராட்சி சார்பில், 20 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, 2024 நவ., 10ல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால், 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த பழைய பஸ் ஸ்டாண்டிற்கு, வெளியூர் பஸ்கள் எதுவும் வராமல், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, பெங்களூரு, சேலம், திருச்சி, கரூர், மதுரை, துறையூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்ட், 7 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. இதனால், வெளியூர் செல்வதற்காக பஸ் ஸ்டாண்ட் செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், அரசு பணிக்கு செல்வோர், தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும், தினமும், தங்களது டூவீலர்களை புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள மாநகராட்சி, டூவீலர் ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து பஸ் மூலம் வெளியூர் சென்று வருகின்றனர்.நாளொன்றுக்கு, 1,000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், டூவீலர் ஸ்டாண்டிற்கு வருவதால், அங்கு அமைத்துள்ள, 'ஷெட்' போதாமல் வாகனங்கள் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பஸ் ஸ்டாண்டில் உள்ள, 'டூவீலர் ஸ்டாண்ட்' மாநகராட்சி மூலம் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் நடத்தப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் துவங்கிய, 2024 நவ., 10 முதல் டூவீலருக்கு, நாளொன்றுக்கு பத்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், திடீரென கடந்த, 1 முதல் டூவீலருக்கு, ஐந்து ரூபாய் உயர்த்தி, நாள் ஒன்றுக்கான கட்டணம், 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்ததாரர் வசூலிக்கிறார். இதற்காக வழங்கப்படும் ரசீதில், கட்டணத்தொகை எவ்வளவு என குறிப்பிடப்படவில்லை. காரணம் கேட்டால், 'சேலத்தில் ஒரு வண்டிக்கு, 20 ரூபாய் வசூலிக்கின்றனர்; நாங்கள், 15 ரூபாய் தான் வசூலிக்கிறோம்' என, தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் கலெக்டர் உமா உத்தரவுப்படி, பழைய கட்டணம் வசூல் செய்தும், அதற்கான அறிவிப்பு பேனர் உடனடியாக வைக்கப்பட்டது. ஒருநாள் மட்டுமே நீடித்த நிலையில், 'வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல்' மீண்டும் கட்டணம் உயர்த்தி வசூல் செய்து வருகின்றனர். அறிவிப்பு பலகையையும் அகற்றிவிட்டனர். இதனால், நடுத்தர மக்களான இருசக்கர வாகன ஓட்டிகள், கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.