சாலை விரிவாக்க பணிக்காக மரம் அளவீடு பணி துவக்கம்
ராசிபுரம்: சாலை விரிவாக்க பணிக்காக, மரங்களை அப்புறப்படுத்த அளவீடு செய்யும் பணி தொடங்கியது. ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறையில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாலை அகலப்படுத்தும் பணி நடக்கவுள்ளது. ராசிபுரத்தில் இருந்து, ஆத்துார் செல்லும் பிரதான சாலையில், காக்காவேரியில் இருந்து சீராப்பள்ளி வரை, 3.371 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள மரங்கள், மின் கம்பங்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். முக்கியமாக அகற்ற வேண்டிய மரங்கள் குறித்து வனத்துறையினருடன் இணைந்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று, வெங்காயபாளையம் பகுதியில் உள்ள மரங்களின் சுற்றளவை அளந்து குறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.