மாவட்டம் முழுவதும் தொடர் மழை 12 நாட்களில் 1,389.75 மி.மீ., பதிவு
நாமக்கல்: மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இம்மாதத்தில் இதுவரை, 1,389.75 மி.மீ., மழை பெய்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக கோடை காலத்தை போல் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேர வெப்பம், 100 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்தது. வழக்கமாக ஆடி மாதத்தில் துவங்க வேண்டிய பருவமழை தாமதமாகி வந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.இந்நிலையில், கடந்த, 5ல் மாவட்டம் முழுவதும், பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அன்று ஒரு நாள் மட்டும், 562.50 மி.மீ., மழை பெய்தது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும், பல்வேறு இடங்களில் லேசான மழையும் பெய்தது. மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை, 6:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு: எருமப்பட்டி, 5, குமாரபாளையம், 38.20, மங்களபுரம், 5.20, நாமக்கல், 17, ப.வேலுார், 7, புதுச்சத்திரம், 3.30, ராசிபுரம், 3, சேந்தமங்கலம், 43, திருச்செங்கோடு, 26, கலெக்டர் அலுவலகம், 10, கொல்லிமலை, 11 என, மொத்தம், 168.70 மி.மீ., மழை பெய்துள்ளது. இம்மாதத்தில், கடந்த, 5ல், 562.50, 6ல், 331.80, 9ல், 89.05, 10ல், 94.80, 11ல், 142.90, நேற்று முன்தினம், 168.70 என, இதுவரை, 1,389.75 மி.மீ., பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.