ஆபத்தான ஆற்றுப்பகுதிஎச்சரிக்கை பலகை தேவை
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் ஆற்றுப்பகுதியில் ஆபத்தான இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளிப்பாளையத்தில், காவிரி ஆற்றுப்பகுதியான ஆவத்திபாளையம், சந்தைப்பேட்டை, ஆவாரங்காடு, பெரியார் நகர், வசந்த நகர், காவிரி, ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட ஆற்றுப்பகுதிக்கு துணி துவைக்கவும், குளிக்கவும் மக்கள் வருகின்றனர். மேலும், வெளியூரில் இருந்தும் ஆற்றில் குளிக்க வருகின்றனர். உள்ளூர் மக்களுக்கு ஆற்றில் எந்த இடத்தில் ஆழம் உள்ளது, ஆபத்து நிறைந்த இடம் எது என, தெரியும். ஆனால், வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கு தெரிவதில்லை. தற்போது, கோடை விடுமுறை என்பதால், கோடை வெயிலுக்கு இதமாக குளிக்க மாணவர்களும், குடும்பத்துடனும் வெளியூரில் இருந்து ஆற்றுக்கு வருகின்றனர். இவர்களுக்கு எந்த இடத்தில் ஆழம் உள்ளது என, தெரிவதற்கு வாய்ப்பில்லை. இதனால், ஆழமான இடத்தில் குளித்தால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, முன்னெச்சரிக்கையாக, ஆற்றில் ஆபத்தான இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.