உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.100 கோடி நிலுவை தீபாவளிக்குள் வழங்க கோரிக்கை

பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.100 கோடி நிலுவை தீபாவளிக்குள் வழங்க கோரிக்கை

நாமக்கல், அக். 24-'ஆவினுக்கு பால் வழங்கிய உற்பத்தியாளர்களுக்கு, வழங்க வேண்டிய ஊக்கத்தொகை, 100 கோடி ரூபாயை தீபாவளிக்குள் வழங்க வேண்டும்' என, மாநில குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின், மாநிலக்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. சங்க மாநில தலைவர் முகமது அலி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பெருமாள், நிர்வாகிகள் செல்லத்துரை, சிவாஜி, மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை, 100 கோடி ரூபாயை, தமிழக அரசு, 3 மாதங்களாக வழங்கவில்லை. அந்த தொகையை தீபாவளிக்குள் உடனடியாக வழங்க வேண்டும்.கால்நடை தீவனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பசும்பால் ஒரு லிட்டருக்கு, 45 ரூபாய், எருமை பாலுக்கு, 54 ரூபாய் என கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.தரமான கால்நடை தீவனங்களை, தமிழக அரசு, 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும். 2021ல், ஆவின்பால் விற்பனை விலையில், ஒரு லிட்டருக்கு, மூன்று ரூபாயை, தமிழக அரசு குறைத்ததால், ஆவினுக்கு இதுவரை ஏற்பட்ட, 900 கோடி ரூபாயை வழங்கி, நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும்.ஆரம்ப சங்கங்களின் செயல்பாடுகளுக்காக ஒதுக்கக்கூடிய, ஒரு லிட்டருக்கு, 1.25 ரூபாயை, 50 காசுகள் உயர்த்தி, 1.75 ரூபாய் என வழங்க வேண்டும். வேளாண் பொருள்களுக்கு கொள்முதல் விலை அறிவிப்பதை போல், பாலுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு, கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும்.ஆவின் பால் கொள்முதல், தமிழகத்தில் தினமும், ஒரு கோடி லிட்டராக உயர்த்த வேண்டும். முதல் கட்டமாக, 50 லட்சம் லிட்டராக உயர்த்த வேண்டும். இதற்கான கட்டமைப்பை உருவாக்கவேண்டும். சத்துணவுத்திட்டத்தில், 'ஆவின்' பாலையும் சேர்த்து, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். 'ஆவின்' பால் விற்பனைக் கமிஷன் தொகையை உயர்த்தவேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தில், இறப்பிற்கு, 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் நவ., 19ல், அனைத்து மாவட்டங்களிலும், பால் உற்பத்தியாளர்கள் கறைவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ