மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
28-Aug-2025
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி என்பது, விநாயகருக்காக ஹிந்துக்கள் எடுக்கும் முக்கியமான விழா. இந்த விழா ஆண்டுதோறும், ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனுார், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கிராமங்கள் மற்றும் நகரங்கள் தோறும், பந்தல்கள் அமைத்து, விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகருக்கு, அதிகாலையிலேயே சிறப்பு அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு எருக்கம்பூ மாலை, அருகம்புல் மாலை போன்றவற்றை அணிவித்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், நாமக்கல் சந்தைபேட்டைபுதுார் செல்வவிநாயகர் கோவிலில், விநாயகருக்கு பிரமாண்டமாக தசாவதார அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள செங்கழநீர் பிள்ளையார் கோவில், சேலம் சாலையில் உள்ள மாயம்பிள்ளையார் கோவில், திருச்செங்கோடு சாலையில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோவில், கணேசபுரம் பிள்ளையார் கோவில், மோகனுார் சாலை, டீச்சர்ஸ் காலனி கல்வி விநாயகர் கோவில், அன்பு நகர் விநாயகர் கோவில், முல்லை நகர் செல்வகணபதி கோவில்.நாமக்கல் அழகு நகர் சக்தி கணபதி கோவில் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோவில்களிலும், விநாயகருக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பஞ்சமுக ஹேரம்ப கணபதிப.வேலுார் சுல்தான்பேட்டையில் பிரசித்தி பெற்ற பஞ்சமுக ஹேரம்ப கணபதி கோவில் உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 23 ம் தேதி காலை 5:00 மணிக்கு மகா கணபதி ேஹாமத்துடன் தொடங்கியது. 24 ம் தேதி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும், 25 ம் தேதி 108 வலம்புரி சங்கு பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் மாலை பால்குட அபிஷேகம், திருமஞ்சன அபிஷேகம் மற்றும், 16 வகை வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதிக்கு அலங்காரம் செய்யத் தொடங்கினர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து வாசனை பூக்களால் அலங்கரித்த விநாயகர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நாமக்கல், கரூர், ஈரோடு சேர்ந்த பக்தர்கள் வழிபாடு செய்தனர்.765 இடங்களில் விநாயகர் சிலைகள் நாமக்கல் மாவட்டம் முழுவதும், இந்து முன்னணி, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், ஏராளமான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.நாமக்கல் நகரை பொறுத்த வரையில், பலபட்டரை மாரியம்மன் கோவில் அருகில், தட்டார தெரு, பரமத்தி சாலை, சேலம் சாலை உள்பட, 52 இடங்களிலும், நாமக்கல் மாவட்டம் முழுவதும், 765 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
28-Aug-2025