419 பயனாளிகளுக்கு ரூ.5.75 கோடியில் அமைச்சர் நலத்திட்ட உதவி வழங்கல்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஜீவாசெட் பகுதியில், நேற்று அரசு நிலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி., பிரகாஷ், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு, இலவச வீட்டுமனை பட்டா, கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணை என, மொத்தம், 419 பயனாளிகளுக்கு, 5.75 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின், திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, அடிப்படை வசதிகள் மற்றும் வீட்டுமனை பட்டாக்களை வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளார். 10 ஆண்டுகளில் நிறைவேற்றாத திட்டங்களை, கடந்த, 3 ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளார். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற உயரிய நோக்கில், ஒவ்வொரு பகுதியிலும் மக்களை நேரடியாக சென்று அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விரைவில் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், கடந்த, 3 ஆண்டுகளில், 17,335 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்களை பயன்படுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.