உயிரிழந்த துாய்மை பணியாளரின் குடும்பத்திற்கு நிவாரணம் மறுப்பு டவுன் பஞ்., மீது அதிருப்தி
ப.வேலுார், ப.வேலுார் டவுன் பஞ்., பகுதியில் குப்பை சேகரிக்க தனியார் டிராக்டரை பயன்படுத்தியபோது, அதில் அமர்ந்து சென்ற துாய்மை பணியாளர் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு, டவுன் பஞ்., நிர்வாகம் நிவாரணம் வழங்க மறுப்பதால், குடும்பத்தினர் மற்றும் துாய்மை பணியாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. குப்பை சேகரிக்க, 80 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். டவுன் பஞ்., தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி உள்ளார். டவுன் பஞ்., நிர்வாகம், குப்பை சேகரிக்க தனியார் டிராக்டரை, தினசரி, 1,750 ரூபாய் வாடகைக்கு எடுத்து சில நாட்களாக பயன்படுத்தி வந்தது. கடந்த, 2024 அக்., 7ல், துாய்மை பணியாளர்கள் வழக்கம்போல் குப்பை சேகரிக்க, வாடகை டிராக்டரில் கிளம்பினர். அதில், ஐந்து துாய்மை பணியாளர்கள் அமர்ந்திருந்தனர். டிரைவர் சுப்பிரமணி, 45, டிராக்டரை ஓட்டினார். ப.வேலுார் செக்போஸ்ட் அருகே சென்றபோது, டிராக்டரில் அமர்ந்திருந்த துாய்மை பணியாளர் சுப்பிரமணி, 48, தவறி கீழே விழுந்து இறந்தார்.விசாரணையில், விவசாயத்துக்கு மட்டும் பயன்படுத்தப்படும் டிராக்டர் என்பதும், அந்த வண்டிக்கு எப்.சி., இன்சூரன்ஸ் காலாவதியானதும்; டிரைவர் சுப்பிரமணியின் லைசென்ஸ் காலாவதியானதும் தெரியவந்தது. இதையடுத்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முத்துசாமி, டிராக்டரை பறிமுதல் செய்தார்.இதையடுத்து, உயிரிழந்த துாய்மைப்பணியாளர் சுப்பிரமணியின் மனைவி சுப்புலட்சுமி, 43, 'பணியின்போது இறந்த தன் கணவர் சுப்பிரமணிக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தார். பத்து மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட மனு தற்போது, 'நிராகரிக்கப்பட்டதாகவும்; நிவாரணம் வழங்க இயலாது' எனவும், டவுன் பஞ்., நிர்வாகம் தெரிவித்தது. இதனால், சுப்பிரமணியின் குடும்பத்தினர் மற்றும் துாய்மை பணியாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள் கூறுகையில், 'சக ஊழியரான சுப்பிரமணி இறப்புக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவில்லை என்றால், துாய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடும் சூழ்நிலை ஏற்படும். அவரது வாரிசுதாரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும்' என்றனர்.ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் வேல்முருகன்(பொ) கூறுகையில், ''ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலராக, நான் பொறுப்பேற்று சில நாட்கள் மட்டுமே ஆகிறது. துாய்மை பணியாளர் சுப்பிரமணி இறப்பு குறித்தும், நிவாரணம் கேட்டு அவரது குடும்பத்தினர் மனு அளித்துள்ளதை டவுன் பஞ்., ஊழியர்களிடம் தகவல் கேட்டு தெரிந்து கொண்டேன். இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்கு உரிய தீர்வு காணப்படும்,'' என்றார்.