30 துப்பாக்கி குண்டுகள் முழங்க தி.மு.க.,-எம்.எல்.ஏ., உடல் அடக்கம்
நாமக்கல், மறைந்த தி.மு.க.,-எம்.எல்.ஏ., பொன்னுசாமி உடல், அரசு மரியாதையுடன், 30 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம்(தனி) தொகுதி, தி.மு.க.,-எம்.எல்.ஏ., பொன்னுசாமி, 71; இவர் மாரடைப்பால், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு இறந்தார். அவரது உடல், சேந்தமங்கலம் அருகே, நடுக்கோம்பையில் உள்ள இல்லத்தில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருந்தது. துணை முதல்வர் உதயநிதி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மகேஷ், முத்துசாமி, சிவசங்கர், மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., மற்றும் நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி, எஸ்.பி., விமலா, எம்.பி., மாதேஸ்வரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து, கொல்லிமலையில் உள்ள அவரது தோட்டத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, நேற்று இறுதி சடங்கு செய்யப்பட்டு, அரசு மரியாதையுடன், 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.