பெண் பாலியல் பலாத்கார கொலையில் டி.என்.ஏ., சோதனையில் குற்றவாளி கைது
ராயக்கோட்டை:ராயக்கோட்டை அருகே, ஆடு மேய்க்க சென்ற பெண், பாலியல் பலாத்காரம் செய்து கொலையான சம்பவத்தில், டி.என்.ஏ., பரிசோதனை மூலம், குற்றவாளி கைதானார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த திம்ஜேப்பள்ளி அருகே வசித்தவர், 44 வயது பெண். கடந்த ஏப்., 23ம் தேதி காலை, 10:30 மணிக்கு, ஆடுகளை மேய்ச்சலுக்கு வீட்டிலிருந்து அருகிலுள்ள கொரகுறுக்கி வனப்பகுதிக்கு ஓட்டிச்சென்றார். ஆடுகள் திரும்பி வந்த நிலையில், அப்பெண் வராததால், உறவினர்கள் தேடினர். மறுநாள் காலை, கொரகுறுக்கி வனப்பகுதியில், அரை நிர்வாணத்துடன், சேலையில் துாக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.அவரது மகன் புகார் படி, ராயக்கோட்டை போலீசார் முதலில் தற்கொலை என வழக்குப்பதிந்தனர். விசாரணையில், அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. அதனால், கொலை வழக்காக மாற்றம் செய்து, 10 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். மேலும், 10 பேருக்கும் டி.என்.ஏ., பரிசோதனைக்கு மாதிரிகள் எடுத்து, சென்னை ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பினர். கடந்த மாதம் வந்த அறிக்கையில், ராயக்கோட்டை அடுத்த தொட்டதிம்மனஹள்ளி அருகே நெருப்புக்குட்டையை சேர்ந்த மச்சராஜ், 50, என்பவரது டி.என்.ஏ., பொருந்தியது. அதனால் அவர் தான், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார் என்பதை போலீசார் உறுதி செய்தனர். அதற்குள் கஞ்சா வழக்கு ஒன்றில் சிக்கிய மச்சராஜ், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கிலும் அவர் கைதான நிலையில், அவரை கடந்த, 29ம் தேதி கஸ்டடியில் எடுத்த, ராயக்கோட்டை போலீசார், நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.விசாரணையில், கொரகுறுக்கி வனப்பகுதிக்கு தேன் சேகரிக்க, மச்சராஜ் அடிக்கடி செல்வதும், சம்பவ நாளில் வனத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டு, அவரது சேலையிலேயே துாக்கில் தொங்க விட்டது, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.