உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / படித்துறையில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு குளிக்கும்போது விபரீதம் ஏற்பட வாய்ப்பு

படித்துறையில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு குளிக்கும்போது விபரீதம் ஏற்பட வாய்ப்பு

பள்ளிப்பாளையம், படித்துறையில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளதால், பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.பள்ளிப்பாளையம் அருகே, பெரியார் நகர் பகுதி ஆற்றங்கரையோரத்தில் பொதுமக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் வசதியாக படித்துறை கட்டப்பட்டுள்ளது. இந்த படித்துறையை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக படித்துறையை சுற்றிலும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து காணப்படுகிறது. நாளுக்குநாள் ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் படித்துறையில் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தற்போது படித்துறை இருப்பதே தெரியவில்லை. அந்தளவுக்கு ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளன. மேலும், படித்துறையில் குளிக்கும்போதும், துணி துவைக்கும்போதும், ஆகாயத்தாமரை செடிகள் காலில் மாட்டி விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சில நேரம், படித்துறையை சுற்றி படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை பார்த்தவுடன், குளிக்கவும், துணி துவைக்கவும் முடியாமல் திரும்பி சென்று விடுகின்றனர். எனவே, படித்துறையை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, குமாரபாளையம் நீர் வளத்துறை மற்றும் பள்ளிப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை