உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டெல்டா மாவட்டங்களில் 30 லட்சம் டன் நெல் தேக்கம் இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

டெல்டா மாவட்டங்களில் 30 லட்சம் டன் நெல் தேக்கம் இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

சென்னை, ''டெல்டா மாவட்டங்களில் மட்டும், 30 லட்சம் டன் நெல் தேங்கியுள்ளது. கடந்த, 15 நாட்களாக விவசாயிகள் சாலைகளில் நெல் மூட்டைகளை வைத்துக் கொண்டு காவல் காத்து வருகின்றனர்,'' என, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டினார். சட்டசபையில் நேற்று, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.,: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் நெல் அறுவடை நடந்து வருகிறது. விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில், தி.மு.க., அரசு பல்வேறு குளறுபடிகளை உருவாக்கி இருப்பதாக, விவசாயிகள் புகார் சொல்கின்றனர். போதுமான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.திறக்கப்பட்ட நிலையங்களிலும் ஒரு நாளைக்கு, 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம், 17 சதவீதமாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், 22 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கோணி பைகள், பாதுகாக்க தார்பாய்கள் இல்லை. டெல்டா மாவட்டங்களில் மட்டும், 30 லட்சம் டன் நெல் தேங்கியுள்ளது. கடந்த, 15 நாட்களாக, விவசாயிகள் சாலைகளில் நெல் மூட்டைகளை வைத்துக் கொண்டு காவல் காத்து வருகின்றனர். விவசாயிகள் ரத்தம் சிந்தி உழைத்த நெல் வீணாகக் கூடாது. அரசு விரைந்து நெல் கொள்முதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அமைச்சர் சக்கரபாணி: நெல் கொள்முதல் பணிகள், வழக்கமாக அக்டோபர் 1ம் தேதி தான் துவங்கும். நடப்பாண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில், 6.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும், கடந்த ஆண்டை விட, 13 மடங்கு அதிகமாக நெல் உற்பத்தி நடந்துள்ளது. நெல் அதிகம் விளைந்துள்ள இடங்களில், 2,000 மூட்டை நெல் நாள்தோறும் கொள்முதல் செய்யப்படுகிறது. சில இடங்களில், 3,000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.ஆலைகளில் அரவை செய்யப்படும் அரிசியில், செறிவூட்டப்பட்ட அரிசியை கலப்பதற்கு, இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு, நீங்கள் மத்திய அரசிடம் பேசி அனுமதி பெற்று தரவேண்டும். அவ்வாறு அனுமதி கிடைத்தால், ஆலைகளில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள் அரவை செய்யப்படும். விவசாயிகளிடம் கொள்முதல் விரைந்து மேற்கொள்ளப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !