நிலக்கடலையில் விதைப்பண்ணை அமைப்பதால் விவசாயிகள் லாபம் பெறலாம்: வேளாண் அதிகாரி
நாமக்கல்: 'நிலக்கடலையில் விதைப்பண்ணை அமைப்பதன் மூலம், விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்' என, விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்புத்துறை வேளாண் உதவி இயக்குனர் சித்திரை செல்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:மண் மற்றும் விதைகள் வழியாக பரவும் நோய்களால், நிலக்கடலையில் இளஞ்செடிகள் பாதிக்கப்பட்டு பயிர் எண்ணிக்கை குறைந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது. அவற்றை தவிர்க்க, ஒரு கிலோ நிலக்கடலை விதைக்கு, உயிர் பூஞ்சாண கொல்லியான, 'டிரைக்கோடெர்மா விரிடி' நான்கு கிராம் மற்றும் 'சூடோமோனாஸ்' 10 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.விதைப்பதற்கு ஒரு நாள் முன்பு விதைநேர்த்தி செய்வதால், நோய்கள் வராமல் பயிருக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், குறைந்த விலையில் கிடைக்கும் உயிர் உரங்களை, நிலக்கடலை விதையுடன் கலந்து விதைப்பதன் மூலம் உரச்செலவை குறைக்கலாம். மண்ணின் இயல்பான தன்மையையும் பாதுகாக்க முடியும். ஹெக்டேருக்கு தேவையான விதை பருப்புடன், 500 மி., நிலக்கடலை 'ரைசோபியம் உயிர் உரம்' கலந்து விதைப்பதன் மூலம், நைட்ரஜனை பயிர்கள் நிலைப்படுத்தி தழைச்சத்தும் மற்றும் 500 மி., பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் கலந்து விதைத்தால், பயிருக்கு தேவையான மணிச்சத்தும் கிடைக்கிறது.அதன் மூலம், உரத்தேவை குறைவதோடு, மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது. விதைநேர்த்தி செய்யும்போது, விதைகள் உரத்துடன் எளிதில் ஒட்டும் வகையில், சாதம் வடித்த கஞ்சியில் சேர்த்து நிழலில் உலர்த்தியபின் விதைக்க வேண்டும். விதைத்த, 30 நாட்களுக்குள், அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை அணுகி, விதைப்பண்ணையை உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். விதைப்பண்ணையில் உரிய வயல் தரங்களை பராமரித்து தரமான காய்களை உற்பத்தி செய்து, சுத்திகரிப்பு செய்து வழங்குவதன் மூலம், அதிக லாபம் ஈட்டமுடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.