நீர்நிலை, ஓடைகளை விவசாயிகள் கடக்க வேண்டாம்: கலெக்டர் எச்சரிக்கை
நாமக்கல், 'வடகிழக்கு பருவமழை காரணமாக, நீர் நிலைகள், ஓடைகளை விவசாயிகள் கடக்காமல் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி எச்சரித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:பல்லாண்டு பயிர்களான மா, பலா, கொய்யா, தென்னை, பாக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும் வகையில், கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து, தண்டு பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்ய வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்காத வகையில், தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும்.மழை அதிக பொழிவு உள்ள நாட்களிள் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தவேண்டும். ஆண்டு பயிரான வாழையில், காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், மரத்தின் அடியில் மண் அணைத்தல் மற்றும் சவுக்கு அல்லது யூகலிப்டஸ் அல்லது மூங்கில் கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்தி முட்டு கொடுக்க வேண்டும். வாழை, மரவள்ளி, வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற பயிர்களுக்கு, உரிய காலத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்காத வகையில், உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். விவசாயிகள், வெள்ளத்தின் போது, தங்கள் பகுதியில் உள்ள நீர் நிலைகள், ஓடைகளை கடக்க வேண்டாம். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பயிர்கள் சேதமடையாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.