மரவள்ளி கிழங்குக்கு குறைந்தபட்ச விலை வலுப்பெறும் விவசாயிகளின் போராட்டம்
ராசிபுரம், மரவள்ளி கிழங்குக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும் என, விவசாயிகளின் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. தமிழகத்தில், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, விழுப்புரம், ஈரோடு ஆகிய, எட்டு மாவட்டங்களில் மட்டும், 18,000 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் மரவள்ளி உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் கிழங்குகள், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள, 350 சேகோ ஆலைகளில் மட்டும் கிழங்கு மாவாகவும், சில ஆலைகளில் ஜவ்வரிசியாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. மரவள்ளியை நம்பி மட்டுமே, விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், லாரி தொழிலாளர்கள், சேகோ தொழிலாளர்கள் என, இரண்டு லட்சம் பேர் உள்ளனர். தமிழகத்தின் விவசாய தொழில்களில் சேகோ ஆலைகளும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், மரவள்ளி கிழங்கு விலை குறைந்து வருவதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பெருமாள் கூறியதாவது: மரவள்ளி டன் ஒன்றுக்கு, 15,000 ரூபாய் குறைந்தபட்ச விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போது, டன் ஒன்றுக்கு, 6,000 முதல், 7,000 ரூபாய் வரை மட்டுமே விற்கிறது. இதனால், விவசாயிகளின் உற்பத்தி செலவிற்கு கூட கட்டுப்படியாகவில்லை. அதேபோல், சேகோ பேக்டரிகள் உற்பத்தி செய்யும் ஜவ்வரிசி மூட்டை ஒன்றுக்கு, 4,500 ரூபாயும், கிழங்கு மாவு மூட்டைக்கு, 3,500 ரூபாயும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சேகோ சர்வை தவிர தனிப்பட்ட முறையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். அப்போதுதான் சேகோ சர்வ் மூலம் சேகோ பேக்டரிக்கு நிர்ணய விலையை தர முடியும். பேக்டரிக்கு அந்த விலை கிடைத்தால் தான் விவசாயிகளுக்கு, 15,000 ரூபாய் கிடைக்கும்.மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சேகோ பொருட்களுக்கு மத்திய அரசு வரியை குறைத்துள்ளது. இதனால் உள்ளூர் பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு, விவசாயிகள், சேகோ உரிமையாளர்கள், அரசு சார்பில் அதிகாரிகள் என முத்தரப்பு கூட்டத்தை கூட்டி இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, கிழங்கு வாங்கி விற்கும் தரகர்கள் சார்பில் கூறியதாவது: விலை குறைவுக்கு ஜவ்வரிசி விற்பனையை சுட்டிகாட்டும் நிலை உள்ளதால், மரவள்ளி கிழங்கில் இருந்து குளுக்கோஸ் தயாரிக்கும் ஆலையை, நாமக்கல் மாவட்டத்தில் அமைக்க வேண்டும். கிழங்கு விளைந்தவுடன், 40 நாட்களில் வெட்டி எடுத்துவிட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், விலை குறைந்து கொண்டே செல்கிறது. 2000ம் ஆண்டு, 1,350 எண்ணிக்கையில் இருந்த சேகோ ஆலைகள் தற்போது, 350 ஆக குறைந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் தொழில் நலிவு, பெரிய தொழிற்சாலைகளின் ஆளுமை தான். கிழங்கு விலை நிர்ணயமே, அதிகபட்சமாக விற்கும் ஜவ்வரிசி விலையை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது. இதனால், அதிக விலைக்கு கிழங்கை வாங்கி குறைவான விலையில் மாவு, ஜவ்வரிசி விற்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன.சேகோ பேக்டரிக்கும், குறைந்தபட்ச விலை நிர்ணயத்தில் ஜவ்வரிசி, கிழங்கு மாவு மூட்டைகள் விற்கப்பட்டால் அவர்களும் இழப்பின்றி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலைய கொடுப்பார்கள். நீண்ட ஆண்டாக, மரவள்ளி கிழங்குக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் குறித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தாலும், தற்போது இது போராட்டமாக மாறியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.