உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வேளாண் நிறுவனம் பெயரில் நிதி மோசடி; பணத்தை இழந்தோர் புகாரளிக்க அழைப்பு

வேளாண் நிறுவனம் பெயரில் நிதி மோசடி; பணத்தை இழந்தோர் புகாரளிக்க அழைப்பு

நாமக்கல்: 'நாமக்கல்லில், வேளாண் நிறுவனம் பெயரில் நிதி மோசடியில் ஈடுபட்டோர் குறித்து புகாரளிக்கலாம்' என, பாதிக்கப்பட்டோருக்கு, மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல்-சேலம் சாலையில், முருகன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே, 'ஜெனித் ஹை-டெக் அக்ரி பார்ம்' என்ற நிறுவனம் இயங்கி வந்தது. அதன் உரிமையாளர்களான மணிவண்ணன், சந்திரசேகர், ரவிச்சந்திரன் ஆகியோர், பொதுமக்களிடையே தினசரி சேமிப்பு, மாதாந்திர சேமிப்பு, வைப்பீடு ஆகிய திட்டங்களின் கீழ் முதலீடு செய்யுமாறு ஆசைவார்த்தை கூறி அதிகளவில் முதலீடுகளை பெற்றுள்ளனர்.ஆனால், அந்த பணத்தை திரும்ப வழங்காமல், ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக, 2015 மார்ச், 22ல் அவர்கள் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் மீண்டும் புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், பணம் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது. விசாரணை முடிவடைந்து, விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர், உடனடியாக தங்களிடம் உள்ள அசல் ஆவணங்களுடன், நாமக்கல் முருகன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில், மார்ச், 12க்குள் காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை புகாரளிக்கலாம். மேலும், விபரங்களுக்கு, பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரின், 9498169199 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை