லாரி தொழில் மேம்பாட்டுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்: மாஜி அமைச்சர் பேச்சு
நாமக்கல்: நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் அருள் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் வாங்கிலி முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது, தொழிலின் தற்போதைய நெருக்கடியான சூழல் குறித்தும், போலீசாரின் ஆன்லைன் அபராதம் விதிப்பு, நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம் கூடுதல் வசூல் போன்ற காரணங்களால், லாரி தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. போதிய வருவாய் இல்லை என, லாரி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: நாமக்கல், ஈரோடு, சேலம் பகுதிகளில் லாரித் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. லாரி உரிமையாளர்களுடன், 25 ஆண்டுகளாக நெருங்கி பழகி வருகிறேன். அவர்களது பிரச்னைகள் பற்றி எனக்கு நன்கு தெரியும். மத்திய, மாநில அரசுகள் லாரி தொழில் மேம்பாட்டுக்காக தனி வாரியம் அமைக்க வேண்டும். லாரி உரிமையாளர்களின் பிரச்னைகளை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். லாரி தொழில் முன்னேற்றத்திற்கு, அ.தி.மு.க., எப்போதும் துணையாக நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.சங்க பொருளாளர் சீரங்கன், உபதலைவர் பாலசந்திரன், உதவி தலைவர் குமரவேல், நிர்வாகிள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.