இலவச பரிசோதனை முகாம்: 10,000 பேருக்கு பரிசோதனை
ராசிபுரம்:ராசிபுரத்தில், ராமசாமி உடையார் நினைவாக சென்னை ராமசந்திரா மருத்துவமனை சார்பில், 25ம் ஆண்டாக இலவச பொது மருத்துவ முகாம், ராசிபுரத்தில், நேற்று முன்தினம் தொடங்கியது. ராமசந்திரா மருத்துவ பல்கலை வேந்தர் வெங்கடாசலம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், சரும நோய், காது, மூக்கு, தொண்டை, இதய நோய், முடநீக்கியல், கண், நரம்பியல், சிறுநீரகம், புற்றுநோயியல், உளவியல், பேச்சு மொழி, கேட்பியல், பல் நலத்துறை ஆகிய துறைகளின் கீழ் பரிசோதனை நடத்தப்பட்டது.ரத்த பரிசோதனை, இசிஜி, 2டி ஸ்கேன், எக்கோ, அல்ட்ரா சவுண்டு, மார்பக புற்றுநோய் பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை போன்ற சிறப்பு பரிசோதனைகளும் செய்யப்பட்டன. முகாமில், 160க்கும் மேற்பட்ட துறை சார்ந்த டாக்டர்கள் தனித்தனியாக பரிசோதனை செய்தனர். 10,000க்கும் மேற்பட்டோர் பல்வேறு பரிசோதனைகளை செய்து கொண்டனர். பரிசோதனைக்கு பின், 15 பேருக்கு காது கேட்கும் கருவி, 1,000 பேருக்கு கண் கண்ணாடி, 25 பேருக்கு முழு பல்செட் வழங்கப்பட்டது.