சொத்துவரி உயர்த்திய தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
சொத்துவரி உயர்த்திய தி.மு.க.,வை கண்டித்துஅ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்நாமக்கல், அக். 9-தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்திய, தி.மு.க., அரசை கண்டித்து, நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி சிலை எதிரே, அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், ஒன்றிய செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏ., மனித சங்கிலி போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.அப்போது அவர் பேசியதாவது: மாநகராட்சி பகுதியில் சொத்துவரி உயர்வு, மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., ஆகியவற்றோடு கிராம பஞ்.,களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின் கட்டண உயர்வை கண்டித்தும், வீட்டு வரி, குடிநீர் வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு போதைப்பொருள் பயன்பாடு ஆகிவற்றை கண்டித்தும், மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் மாநகராட்சியை பொறுத்தவரை, கிராம பஞ்.,களை அதனுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் மட்டுமல்லாமல், தி.மு.க.,வினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு இணைப்பதால், 100 நாள் வேலைத்திட்டம், மத்திய அரசு நிதி கிடைக்காது, வீட்டு வரி உயர்ந்து விடும் என்ற பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு, தி.மு.க., அரசு செவி சாய்க்கவில்லை.வரும், 2026ல், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., முதல்வராக பொறுப்பேற்றவுடன், மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., ஆகியவற்றோடு இணைக்கப்பட்ட கிராம பஞ்.,களின் இணைப்பை ரத்து செய்து, மீண்டும் கிராம பஞ்சாயத்தாக தொடர்வதற்கு ஆவன செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.இதேபோல், மோகனுார் டவுன் பஞ்., அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், டவுன் பஞ்., செயலாளர் ராஜவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே நடந்த போராட்டத்திற்கு, பரமத்திவேலுார் எம்.எல.ஏ., சேகர் தலைமையிலும், பள்ளிப்பாளையம் ஒட்டமெத்தை பகுதியில், நகர செயலாளர் வெள்ளிங்கிரி தலைமையிலும், குமாரபாளையத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையிலும், சேந்தமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையிலும், ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் எதிரே, நகர செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையிலும், திருச்செங்கோட்டில், முன்னாள் எம்.எல்.ஏ., பொன்சரஸ்வதி, நகர செயலாளர் அங்கமுத்து ஆகியோர் தலைமையிலும் போராட்டம் நடந்தது. ராசிபுரத்தில் நடந்த போரட்டத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார்.