ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்த யோசனை
நாமக்கல், ''விவசாயிகள், ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து, நன்மை பயக்கும் பசுமை போராளியான உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்த வேண்டும்,'' என, கலெக்டர் துர்கா மூர்த்தி கூறினார்.நாமக்கல்-மோகனுார் சாலையில், வேளாண் உழவர் நலத்துறையின் கீழ், வேளாண் இணை இயக்குனர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில், கலெக்டர் துர்கா மூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், இங்கு உற்பத்தி செய்யப்பட்டு, வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் திட்டங்களுக்கு ஏற்ப, 50 சதவீதம் அல்லது முழு மானியத்தில், விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், 56 மெட்ரிக் டன் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பயிர்களில், பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் பயிர் மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதை கட்டுப்படுத்த, அதிக அளவில் ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இவை, நன்மை செய்யும் பூச்சிகளை அழிப்பதுடன் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. அதனால், ரசாயன பூச்சிக்கொல்லியை தவிர்த்து, ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் நோக்கில், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.நாமக்கல் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில், உற்பத்தி செய்யப்படும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமின்றி திருப்பத்துார், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் போன்ற பிற மாவட்டங்களுக்கும், இலக்கின்படி அனுப்பப்படுகிறது. அதன்படி, இதுவரை, 25 மெட்ரிக் டன் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட விவசாயிகள், பயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீமை விளைவிக்கும் ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து, நன்மை பயக்கும் பசுமை போராளியான உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.வேளாண் இணை இயக்குனர் மல்லிகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.