விவசாயிகள் புகாரளித்தால் எப்.ஐ.ஆர்., போடணும்; குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
நாமக்கல்: ''எலச்சிப்பாளையம், திருச்செங்கோடு யூனியனில், மின் மோட்டார், ஒயர் திருட்டு அதிகம் நடக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் புகாரளித்தால், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும்,'' என, குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உமா உத்தரவிட்டார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:நல்லா கவுண்டர், தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர்: விவசாய விளை நிலங்களில், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலெக்டர்: அனைத்து துறையினரும், மட்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக, அனைத்து துறைக்கும், 'சர்க்குலர்' அனுப்ப வேண்டும். உடனடியாக, விளை நிலங்களில் தேங்கி உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த, டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கந்தசாமி, விவசாயி: எலச்சிப்பாளையம் யூனியன், முரங்கம், திருச்செங்கோடு யூனியன், மொளசி உள்ளிட்ட பகுதிகளில், மின்மோட்டார், ஒயர் திருட்டு தொடர்ந்து நடக்கிறது. இதுகுறித்து, போலீசில் புகாரளித்தும் வழக்குப்பதிவு செய்யவில்லை.கலெக்டர்: ஒன்றியம் விட்டு ஒன்றியம் மின் மோட்டார், ஒயர் திருட்டு நடந்து வருகிறது. அவற்றை தடுக்க, போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். அப்போது தான், திருடர்களுக்கு பயம் வரும். விவசாயிகள் திருட்டு குறித்து புகார் செய்தால், எப்.ஐ.ஆர்., போட வேண்டும். மேலும், இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். இது தொடர்பாக, எஸ்.பி.,யிடம் பேசுகிறேன்.மெய்ஞானமூர்த்தி, விவசாயி: இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும் பயிர்களுக்கு, இழப்பீடு வழங்க காப்பீடு செய்யப்படுகிறது. அதேபோல், வன விலங்குகளால் பயிர்கள் சேதமடைகிறது. அவற்றுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.குப்புதுரை, மோகனுார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகி: பரமத்தி இடும்பன் குளம், 202 ஏக்கர் பரப்பில் உள்ளது. ஏழு ஆண்டுகளில், ஏழு முறை நிரம்பி உள்ளது. அந்த நீரை, எஸ்.வாழவந்தியில் உள்ள ஏரிக்கு திருப்பிவிட்டால், விவசாய விளை நிலங்கள் பயன்பெறும். இவ்வாறு விவாதம் நீடித்தது.