வாகனம் நிறுத்தும் இடமாக குளக்கரை திடல் அறிவிப்பு: கார், டூவீலருக்கு கட்டணம் வசூல்
நாமக்கல்: குளக்கரை திடல் வாகனம் நிறுத்தும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் மலைக்கோட்டையையொட்டி கமலாலய குளக்கரை திடல் அமைந்துள்ளது. மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், புராதன சின்னமாக விளங்கி வரும் மலைக்கோட்டையை பாதுகாக்கும் வகையில், அதன் அருகில் புதிய கட்டடங்கள் கட்டவும், விரிவாக்கம் செய்யவும் தொல்லியல் துறை தடை விதித்துள்ளது. இந்த திடலில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் தொல்பொருள் துறை அனுமதி பெற்று நடத்தப்பட்டு வந்தது. தேர் திருவிழாவின் போது கடைகள் அமைக்கப்படும்.இந்த திடலில் கடைவீதிக்கு வரும் வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். இதற்கிடையே, தற்போது திடீரென தொல்லியல்துறை குளக்கரை திடலை வாகனம் நிறுத்தும் இடமாக அறிவித்து கட்டணம் வசூல் செய்ய அனுமதி அளித்துள்ளது.அதற்காக தனி டெண்டர் விடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து டெண்டர் எடுத்தவர்கள், நேற்று முதல் குளக்கரை திடலுக்கு செல்லும் வழியில் அறிவிப்பு பலகை வைத்து வசூல் செய்ய தொடங்கி உள்ளனர். கார்களுக்கு, 20 ரூபாய், இருசக்கர வாகனங்களுக்கு, 10 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.