வேளாண் பொருள் ஏற்றுமதி ஆலோசனை மையம் துவக்கம்
நாமக்கல், ஜன. 2-'வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு உதவிடும் வகையில், நாமக்கல்லில் வேளாண் ஏற்றுமதி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தில், வேளாண் ஏற்றுமதி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த விளைபொருட்களுக்கு ஏற்றுமதி நடைமுறைகள், ஏற்றுமதிக்கேற்றவாறு முதன்மைப்படுத்துதல், சிப்பமிடல் போன்றவற்றை மேற்கொள்ள வழிமுறைகளையும், வங்கிக்கடன் பெற வழிகாட்டுதலும், வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்படும்.விவசாயிகள், சிறு வேளாண் வணிகர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.