மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மட்டுமே அதிக நிதி பெற முடியும்: நயினார் நகேந்திரன்
நாமக்கல், ''மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமாக இருந்தால் மட்டுமே அதிக நிதி பெறமுடியும்,'' என, விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற முழக்கத்துடன், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, நேற்று முன்தினம், நாமக்கல்லில் தன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இரண்டாம் நாளான நேற்று, நாமக்கல் மாவட்டம், மோகனுார், ஊனாங்கல்பட்டியில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கை குறித்து பேசினர்.தொடர்ந்து, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:தமிழகத்தில் நடக்கும் ஆட்சி விவசாயிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து தொழில் வர்க்கத்திற்கும் எதிரான ஒரு ஆட்சி. 'தன் குடும்பம் வாழவேண்டும்; தனி மனிதன் சாக வேண்டும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நடப்பதாகத்தான் நான் கருதுகிறேன். பெருந்துறையில் உள்ள சிப்காட் மூலம், கழிவு பொருட்கள் கலந்து நிலத்தடி நீர் கெமிக்கலாகி, அப்பகுதி மக்கள் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், அப்பகுதியில் சிப்காட் வரவே வராது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். கரும்பு டன்னுக்கு, 4,000 ரூபாய் தருவதாக தெரிவித்திருந்தனர். ஆனால், இதுவரை தரவில்லை. தற்போது, 3,200 ரூபாய் மட்டுமே தருகின்றனர். இது, விவசாயிகளுக்கு காணாது. குறைந்தபட்சம், ஒரு டன்னுக்கு, 4,000 ரூபாய் இருந்தால் தான் கட்டுப்படியாகும்.நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில், ஏழு ரயில் நிறுத்தங்கள் உடனடியாக ஏற்படுத்த முடியும். அதற்கு, மத்திய அரசின் பணம் இருந்தால் தான் முடியும். மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமாக இருந்தால் மட்டுமே, அதிக நிதி பெறமுடியும்.உதாரணத்திற்கு, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியின் போது, இ.பி.எஸ்., 40,000 கோடி ரூபாய் வாங்கி வந்தார். சாலை அவர் ஆட்சி காலத்தில் போடப்பட்டது. கொங்கு மண்டலம் சிறப்பாக இருப்பதற்கு, இ.பி.எஸ்., தான் காரணம். இரண்டு நாட்களுக்கு முன், கோவையில் நடந்த சம்பவத்தை பார்த்தால், பெண் பிள்ளைகளை வைத்துள்ள அனைவருக்கும் கண்ணீர் வரும். இந்தியாவையே உலுக்கிவிட்டது. அவ்வளவு கொடூரமான சம்பவம். இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் வரணும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநில துணை தலைவர்கள் ராமலிங்கம், துரைசாமி, கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.