ட்ரெய்லர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை தீர்க்க மத்திய அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்
நாமக்கல் ;'நாமக்கல் ட்ரெய்லர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும்' என, எம்.பி., மாதேஸ்வரன், மத்திய எக்கு மற்றும் கனரக தொழிற்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:பெல் ஒப்பந்தம் கோரும்போது, மண்டலம் வாரியாக இல்லாமல், பழைய முறைப்படி மாநிலங்கள் வாரியாக வழங்கக்கூடிய வாடகை கட்டணத்தை கி.மீ., கணக்கிட்டு வழங்க வேண்டும். நாமக்கல் ட்ரெய்லர் லாரி சங்கம் மூலம், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, 70 முதல், 80 சதவீதம் வரை, சரக்குகளை கையாண்டு பெல் நிறுவனத்திற்கு நல்ல முறையில் இருந்து வருகிறது. அதை கருத்திற்கொண்டு, வரும் ஆண்டுகளிலும், சரக்குகளை கையாள ஏதுவாக பணிகள் மற்றும் ஒப்பந்தங்கள் வழங்க ஆவண செய்ய வேண்டும்.ஒப்பந்தம் எடுக்கும்போது, இணைய வழியில் திறந்த வழி ஒப்பந்தமாக அமைக்க வேண்டும். இணைய வழியில் ஒப்பந்தம் கோரும் போது, லாரி தொழிலில் உள்ளவர்களும் ஒப்பந்தம் கோர முடியும். லாரிகளுக்கு போடப்படும் ஆன்லைன் வழக்குகளுக்கு, நேரம், தேதி, வண்டி புகைப்படம் தெளிவாக வழங்கும் பட்சத்தில், லாரி உரிமையாளர்களுக்கு ஏற்படும் இணையவழி வழக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.பெல்லில் இருந்து சரக்கு ஏற்றிச்செல்லும் வகனம் இறக்கும் இடத்தில், 24 மணி நேரத்திற்குள் இறக்கிவிட வேண்டும். தவறும் பட்சத்தில், ஒரு நாளைக்கு வண்டிக்கு 'ஹால்டிங்' வாடகை கட்டணமாக, 4,000 ரூபாய் வழங்க வேண்டும். லாரிகள் விபத்தில் சிக்கும்போது, தவறு எந்த வண்டியின் மீதுள்ளதோ அந்த வண்டியின் மீது தான் அபராதம் விதிக்க வேண்டும். பெரிய வண்டியின் மீது அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும்.விபத்தில் சிக்கும் லாரி டிரைவர் இறக்கும்பட்சத்தில், 60 வயது வரை மாத சம்பளமாக, 15,000 ரூபாய் வழங்குவதை, 40,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ட்ரெய்லர் லாரிகள் மல்டி ஆக்சில் என்ற முறையை மாற்றி, பழைய முறையிலேயே ஆர்டிக்கல் வேகிக்கில் என்று குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.