மேலும் செய்திகள்
கோவில்களில் நவராத்திரி விழா இன்று துவக்கம்
03-Oct-2024
நாமக்கல்: நவராத்திரி விழா ஆரம்பமானதையடுத்து, நாமக்கல் நரசிம்மர் கோவிலில் கொலு பொம்மை வைக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டு நவராத்திரிவிழா நேற்று துவங்கியது. வரும், 13 வரை விழா நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மர் கோவிலில் தினமும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நேற்று மச்சாவதாரம், இன்று (அக்., 4) கூர்மாவதாரம், 5ம் தேதி வாமனாவதாரம், 6 தேதி ரங்கமன்னார் திருக்கோலம், 7ல், ராமாவதாரம், 8ல்,கிருஷ்ணாவதாரம், 9ம் தேதி பரமபதநாதர், 10ல், மோகன அவதாரம், 11ம் தேதி ராஜாங்க சேவை, 12 இரவு, 7:00 மணிக்கு அரங்கநாதர், நரசிம்மர் சுவாமிகள் கமலாலய குளக்கரையில் எழுந்தருளி அம்பு போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி விசேஷ திருக்கோலத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதை முன்னிட்டு தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளையராஜா, அறங்காவலர் குழுத்தலைவர் நல்லுசாமி உள்ளிட்ட அங்காவலர்கள் செய்துள்ளனர்.* ப.வேலுார், சுல்தான்பேட்டை பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, முதல் நாளான நேற்று காலை ஆனந்த விநாயகர், பாலமுருகனுக்கு பால் அபிஷேகம், பகவதி அம்மனுக்கு, 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் பகவதி அம்மனுக்கு, மகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.மாலை, 6:00 மணிக்கு நவராத்திரி விழா முதல் நாளான நேற்று, பகவதி அம்மன் ஆலய வளாகத்தில் கொலு வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொலு பொம்மைகளை பார்த்த பின், அம்மனை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல், பேட்டை புது மாரியம்மன் கோவிலில் கொலு வைத்து வழிபாடு செய்தனர்.
03-Oct-2024