மனு அளித்தும் நடவடிக்கை இல்லை விவசாயிகள் கொந்தளித்ததால் பரபரப்பு
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. விவசாயிகள், தங்களது குறைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். அப்போது, இளம் விவசாயிகள் சங்க தலைவர் சவுந்திரராஜன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், 'நாங்கள் கடந்த ஆறு மாதத்திற்கு முன், ப.வேலுார் வாரச்சந்தையில் வசூல் மோசடி நடக்கிறது; அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் துார்வார வேண்டும்;விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய நிலக்கடலையை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனு கொடுத்திருந்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், பரபரப்பு ஏற்பட்டது.அப்போது, கலெக்டர் துர்கா மூர்த்தி, அதிகாரிகளை அழைத்து 'ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' எனக்கேட்டார். ஆனால், அதிகாரிகள் மவுனம் காத்தனர். தொடர்ந்து, ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். 'மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, கலெக்டர் உறுதி அளித்தார். அதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.இளம் விவசாயிகள் சங்க தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், ''குறைகள் குறித்து, ஆறு மாதத்திற்கு முன் மனு அளித்தும், அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு முறையும், கலெக்டர் தலைமையில் நடந்தாலும், விவசாயிகளின் குறைகள் தீர்ப்பதில்லை. பெயரளவில் மட்டுமே கூட்டம் நடக்கிறது,'' என்றார்.