வெங்காய அறுவடை துவக்கம்: கிலோ ரூ.50க்கு விற்பனை
ராசிபுரம்: ராசிபுரம் சுற்று வட்டார பகுதியான கவுண்டம்பாளையம், அணைப்பாளையம், குருக்கபுரம், முத்துக்காளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் தொடர் மழை பெய்து வந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த வெங்காயத்தை விவசாயிகளால் வெட்ட முடியவில்லை. இந்நிலையில் சில தினங்களாக மழை நின்று, வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. வயலும் உளர்ந்து மண் வெட்ட வசதியாக உள்ளது.இதனால், விவசாயிகள் வெங்காயத்தை வெட்ட தொடங்கியுள்ளனர். வெங்காயம் கிலோ தற்போது, 35 ரூபாயிலிருந்து, 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வயலிலேயே வியாபாரிகள் விலை பேசி வாங்கி செல்கின்றனர். கிலோவுக்கு, 5 ரூபாய் வரை விவசாயிகள் குறைவாக கொடுத்தாலும், வேலை, அலைச்சல் குறைவாக இருப்பதால் வியாபாரிகளிடமே விவசாயிகள் விற்று வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்குள் இப்பகுதியில் உள்ள, 90 சதவீத வெங்காயத்தை அறுவடை செய்து விடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.