சாக்கடை கான்கிரீட்டுகள் உடைப்பால் மக்கள் அவதி
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்.,ல் வேங்காத்தாள் காலனி பகுதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு வீட்டுமனை கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்டது. இதில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். காலனி முழுவதும் சிமென்ட் கான்கிரீட்டால் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் குறுக்கே சாக்கடை செல்லும்போது, வாகனங்கள் செல்ல வசதியாக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சில ஆண்டுகளிலேயே சேதமடைந்து விட்டது. இதனால், சாலையை தாண்டி டூவீலர், சைக்கிள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இப்பகுதியில் உள்ளவர்களே சாக்கடை மீது பலகை கற்களை போட்டு மூடியுள்ளனர். ஆனால், தற்போது எல்லா பகுதியிலும் சாக்கடை கான்கிரீட்டுகள் உடைந்து வருகின்றன. பஞ்., நிர்வாகம் சேதமடைந்த கான்கிரீட்டுகளை அகற்றிவிட்டு, புதிய பலகை கற்கள் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.