உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மொபைல் போனுக்கு பதிலாக வாசனை திரவியம்; ஆன்லைன் விற்பனையாளருக்கு ரூ.44,519 அபராதம்

மொபைல் போனுக்கு பதிலாக வாசனை திரவியம்; ஆன்லைன் விற்பனையாளருக்கு ரூ.44,519 அபராதம்

நாமக்கல்: 'மொபைல் போனுக்கு பதிலாக வாசனை திரவியத்தை அனுப்பிய, 'ஆன்லைன்' விற்பனையாளர், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, 44,519 ரூபாய் வழங்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.நாமக்கல், ஆர்.பி.புதுாரை சேர்ந்தவர் சரவணகுமார், 36; இவர், 'அமேசான்' இணையதளத்தில் மொபைல் போன் ஒன்றை பார்வையிட்டுள்ளார். அதன் விற்பனையாளராக, கோவை பல்லடம் சாலையில் உள்ள, 'சர்சிதா ஆசியானா' என்ற நிறுவனம் காட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, தேர்வு செய்த மொபைல் போனுக்கு, 24,519 ரூபாயை, 'கிரெடிட்' கார்டை பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்தியுள்ளார். பணம் செலுத்திய மறுநாளே, கூரியர் மூலம் சரவணகுமாரின் முகவரிக்கு, 'பார்சல்' ஒன்று வந்துள்ளது.அதை பிரித்து பார்த்தபோது, தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவியம் சிறிய பாட்டில் ஒன்று இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த சரவணகுமார், 'ஆன்லைன்' விற்பனை இணையதள நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு புகாரளித்துள்ளார். ஆனால், சரவணகுமார் செலுத்திய பணத்திற்கான மொபைல் போன் வழங்கவில்லை.இதனால், 'ஆன்லைன்' விற்பனை இணையதள நிறுவனத்தின் மீதும், இணையதளத்தில் விற்பனையாளராக காட்டப்பட்ட நிறுவனத்தின் மீதும், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், கடந்த ஜூனில், சரவணகுமார் வழக்கு தாக்கல் செய்தார்.விசாரணை முடிந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர், நேற்று தீர்ப்பளித்தனர். அதில், சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம், 'ஆன்லைன்' விற்பனை இணையதள நிறுவனமும், அதன் விற்பனையாளரும் சேவை குறைபாடு புரிந்துள்ளதை வழக்கு தாக்கல் செய்தவர் நிரூபித்துள்ளார்.அதனால், வாடிக்கையாளர் செலுத்திய, 24,519 ரூபாய், சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக, 20,000 ரூபாய் என, மொத்தம், 44,519 ரூபாயை, நான்கு வாரத்துக்குள் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க, ஆன்லைன் இணையதள விற்பனை நிறுவனத்திற்கும், அதன் விற்பனையாளருக்கும் உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை