தடுப்பணையால் மெகா மணல் திட்டு குடிநீருக்கு நீர்வழிப்பாதை அமைக்க மனு
நாமக்கல், பவேலுார், நன்செய் இடையாறை சேர்ந்த பொதுமக்கள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ப.வேலுார் தாலுகா, அணிச்சம்பாளையம் கிராமத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. 2024ல், காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, நன்செய் இடையாறு கரையில், மிகப்பெரிய மணல் திட்டுகள் உருவாகியுள்ளன. இதனால், அந்த கிராமத்தில் காவிரி ஆறு மற்றும் ராஜவாய்க்காலில் நீர் வருவது தடைபட்டு, அந்த நீர் முழுவதும் புகளூர் காவிரி கரை ஓரமாக சென்று விடுகிறது. மேலும், நன்செய் இடையாறு ராஜ வாய்க்காலில் வெங்கரை, பொத்தனுார், ப.வேலுார் ஆகிய டவுன் பஞ்.,களில் கழிவுநீர் கலந்து வருவதால், மணல் திட்டுக்கும், ராஜ வாய்க்காலுக்கும் இடையே உள்ள குடிநீர் ஊற்று கிணறுகளில் கழிவு நீர் கலக்கிறது. இதனால், சுத்தமான நீர் கிடைப்பதில்லை.அதேபோல், நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கால்நடைகள் வளர்ப்போர், கரையோரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்போர் ஆகியோருக்கு தண்ணீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மூலம், அணிச்சம்பாளையம் காவிரி நீர்த்தடுப்பு அணைக்கட்டு பகுதியில் இருந்து, நன்செய் இடையாறு கிராமத்தில் உள்ள ஊற்று கிணறு வரைக்கும் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளை அகற்றி, காவிரி நீர் வரும்படி, நீர் வழித்தட பாதையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.