குழந்தைகள் இல்ல பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கல்
நாமக்கல், நவ. 9-நாமக்கல் கலெக்டர் உமா, கடந்த, 31ல், தீபாவளி அன்று, எருமப்பட்டி ஒன்றியம், வரதராஜபுரம் புனித சேவியர் குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு, பட்டாசுகள் வழங்கி, தீபாவளியை கொண்டாடினார். அப்போது, இல்லத்தில் தங்கியுள்ள ஏழை பெண்கள், 'தையல் இயந்திரம் வேண்டும்' என, கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை பரிசீலனை செய்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், இரண்டு தையல் இயந்திரங்களை இல்லத்தில் உள்ள பெண்களுக்கு வழங்க அனுமதி அளித்தார்.அதையடுத்து, இல்லத்தில் உள்ள, இரண்டு பெண்களுக்கு தையல் இயந்திரங்களை கலெக்டர் உமா வழங்கினார். குழந்தைகள் இல்லத்தில் உள்ள பெண்கள், ஓய்வு நேரத்தில் தையல் பயிற்சி செய்யவும், தங்களுக்கு தேவையான உடைகளை தாங்களே தயாரித்து கொள்ளவும், தையல் இயந்திரங்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்பதால், குழந்தைகள் இல்லத்தினர், கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.