மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.28.92 லட்சத்தில் நலத்திட்ட உதவி
நாமக்கல் :நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம், 522 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.தொடர்ந்து, தாட்கோ சார்பில், ஒன்பது பயனாளிகளுக்கு பேக்கரி, சுமை வாகனம், சூப்பர் மார்க்கெட், சுற்றுலா வாகனம், வெல்டிங் பட்டறை, ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட தொழில்களுக்கு, 84 லட்சத்து, 50,827 ரூபாய் மொத்த தொகையில், 27 லட்சத்து, 11,860 ரூபாய் மதிப்பில் மானியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் படேல்கர் பேஸ்--1 அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு பயனாளிக்கு இந்தியன் வங்கி நிதியாக 1.34 லட்சம் ரூபாய், பயனாளி சொந்த நிதி 15,000 ரூபாய், 1.49 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டிற்கான கடனுதவி ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு, 31 ஆயிரத்து, 500 ரூபாய் மதிப்பில் சர்க்கர நாற்காலிகள் என மொத்தம், 12 பயனாளிகளுக்கு 28 லட்சத்து, 92,360 ரூபாய்- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.