பாலியல் தொல்லையில் இருந்து பெண்களை பாதுகாக்க “உள்ளக குழுக்கள்” அமைக்கணும்
நாமக்கல்:''பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க, அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில், 'உள்ளக குழுக்கள்' அமைக்க வேண்டும்,'' என, கலெக்டர் உமா தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள், கூட்டுறவு துறை சார்ந்த சங்கங்கள், நிறுவனங்கள், கிராம பஞ்சாயத்துகள், போலீஸ் நிலையங்கள், அரசு, தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், வங்கிகள், ஹாஸ்டல்கள். தொழில் நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள், பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களில், 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பணிபுரியும் இடங்களில், ஐந்து நபர் கொண்ட, 'உள்ளக குழு' மற்றும் புகார் பெட்டி அமைக்க வேண்டும்.அந்த குழுவில், 50 சதவீத பெண்கள் இடம்பெற வேண்டும். உள்ளக குழு அமைக்காத அரசு, தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் மீது, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், குழு அமைக்கப்பட்ட உடன் உறுப்பினர்களின் விபரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தின் இணையதளத்தில், வரும் மே, 15க்குள் அனுப்பி வைக்க வேண்டும். விபரங்களை பதிவேற்றம் செய்யாமல் தொடர்ந்து தவறு செய்யும் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும், சட்டப்படி இருமடங்கு அபராதம் விதிக்கப்பட்டு, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.