பள்ளி அருகே மழைநீர் தேக்கம்: மாணவர்கள் அவதி
திருச்செங்கோடு;திருச்செங்கோடு அடுத்த சித்தாளந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, மழைநீர் தேங்கி இருப்பதால், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர்.சித்தாளந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு-பரமத்தி வேலுார் சாலையில் சித்தாளந்துார் பஸ் ஸ்டாப்பில் இருந்து காந்திஆசிரம் செல்லும் வழியில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து வருகின்றனர். சுற்றுப்புற கிராம பகுதியில் இருந்து மாணவ, மாணவியர் நடந்தும், சைக்கிளிலும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால், பள்ளி முன் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதில் வாகனங்கள் சென்று வந்ததால், சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால், மாணவர்களால் எளிதில் கடந்து செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவியர் குண்டும், குழியுமாக உள்ள சாலையை கடக்கும்போது தவறி விழுந்து சேற்றில் விழுகின்றனர். எனவே, மாணவர்கள நலன் கருதி சித்தாளந்துார் பஸ் ஸடாப்பில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி வரை, 100 மீட்டர் சாலையை சரி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.