பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு; ராசிபுரம் தி.மு.க., கவுன்சிலர், மகன்களுக்கு அடி, உதை
ராசிபுரம்: பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததால், ராசிபுரம் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் மற்றும் அவரது மகன்களுக்கு அடி, உதை விழுந்தது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி, 24வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கலைமணி, 54, இவரது மகன்கள் ஸ்ரீராம், 35, லோகசரவணன், 34. கோனேரிப்பட்டியில் வசித்து வருகின்றனர். ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் பின்பகுதியில் உள்ள, டாஸ்மாக்கில் பார் நடத்தி வருபவர் ராஜா, 45. இவரிடம் கவுன்சிலர் கலைமணி மற்றும் அவரது மகன் லோகசரவணன் ஆகியோர் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த வாரம் பாரிலேயே லோகசரவணன் மற்றும் ராஜாவிற்கு தகராறு ஏற்பட்டது. மாமூல் கொடுக்காததால் ஆத்திரமடைந்த லோகசரவணன், முறைகேடாக பார் நடத்துவதாக பல்வேறு துறைகளுக்கு புகார் அனுப்பியுள்ளார். இது குறித்து ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள், நேற்று முன்தினம் இரவு கவுன்சிலர் கலைமணி வீட்டுக்கு சென்று, ஏன் இவ்வாறு தவறாக புகார் செய்கிறீர்கள் என கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் கலைமணி, அவரது மகன்கள் லோகசரவணன், ஸ்ரீராம் மற்றும் ராஜா தரப்பினருக்குள் அடிதடி ஏற்பட்டது. அப்போது கவுன்சிலர் மற்றும் அவரது மகன்களை, ராஜா தரப்பினர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கவுன்சிலர் கலைமணி, அவரது மகன்கள், ராஜா மற்றும் இருவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு சேர்ந்த இடத்திலும், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முதலுதவிக்கு பிறகு, தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி, கலைமணி அங்கிருந்து சென்றுள்ளார். ராசிபுரம் போலீசார் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.இதில் கலைமணி கொடுத்த புகாரில், நான் வீட்டில் இருந்த போது, கோனேரிப்பட்டியை சேர்ந்த பழனிசாமி மகன் மோகன், 43, பார் உரிமையாளர் ராஜா, 45, வெள்ளை பிள்ளையார் கோவிலை சேர்ந்த தங்கவேல் மகன் சங்கர், 26 ஆகியோர் எனது மகனை தேடி வந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில், என்னையும் எனது மகனையும் தாக்கி விட்டனர் என, கூறியுள்ளார். அதே சமயம், சங்கர் கொடுத்துள்ள புகாரில், கவுன்சிலர் மகன் லோகசரவணன் எனக்கு பணம் கொடுக்க வேண்டும். அதை கேட்க சென்றபோது என்னையும், என்னுடன் வந்த ராஜா, மோகன், கோபி ஆகியோரையும் தாக்கிவிட்டனர் என, கூறியுள்ளார். தி.மு.க., கவுன்சிலர் மகன் லோகசரவணன், பார் உரிமையாளர் ராஜா ஆகியோரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க., கவுன்சிலர் கலைமணி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்குவது, அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு குறித்த வீடியோ, வைரலாகி வருகிறது. இந்நிலையில், தி.மு.க., கவுன்சிலர் மகன் லோகசரவணன், பார் உரிமையாளர் ராஜா ஆகியோரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.தி.மு.க., கவுன்சிலரும், பிரச்னையும்தி.மு.க., கவுன்சிலர் கலைமணி தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளில் சிக்கி வருகிறார். ராசிபுரம் நகராட்சிக்கு புறநகர் பஸ் ஸ்டாண்ட் வேண்டும் என, தி.மு.க., நகர செயலர் சங்கர் நடத்திய மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட கலைமணி, சில நாட்களில் எதிர்தரப்பு சார்பில் நடந்த பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழு போராட்டத்திலும் கலந்து கொண்டார். சில நாட்களுக்கு பின், நகராட்சி அலுவலகம் வந்து நகர செயலர் சங்கர் சண்டை போட்டதால், எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று கூறி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பின்னர் ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார். சில மாதங்கள் கழித்து, நகராட்சி சேர்மன் கவிதாவுடன் உட்கார்ந்து கொண்டு, 'சமூக போராளிகள் என்ற பெயரில் பல அமைப்புகள் நகராட்சி நிர்வாகத்தை மிரட்டி வருவதாக' கூறினார்.இந்த நிகழ்ச்சி நடந்து இரண்டு வாரங்களில், மாமூல் கேட்டதாக பார் உரிமையாளர் தாக்கியதில், கவுன்சிலர் கலைமணி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.