இரு சக்கர வாகன கட்டணம் குறைப்பு
நாமக்கல்: நாமக்கல் முதலைப்பட்டியில், மாநகராட்சி சார்பில் புது பஸ் ஸ்டாண்டு அமைக்கப்பட்டு கடந்த நவ., 10 முதல் பயன்பாட்டில் உள்ளது. மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் உள்ளிட்ட அனைவரும் தினமும், மாநகராட்சிக்கு சொந்தமான டூவீலர் ஸ்டாண்டில் வாகனங்களை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பஸ்கள் மூலம் பல இடங்களுக்கு சென்று, திரும்பி வருகின்றனர்.பஸ் ஸ்டாண்டு செயல்பட தொடங்கிய நவ., 10 முதல், ஒரு இருசக்கர வாகனத்திற்கு நாள் ஒன்றுக்கு, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த, 1ஆம் தேதி காலை முதல் திடீரென இருசக்கர வாகனத்திற்கு, ஐந்து ரூபாய் உயர்த்தி 15 ஆக நிர்ணயிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் மூலம் வசூலிக்கப்பட்டது.கட்டண உயர்வால் இருசக்கர வாகன ஓட்டிகள், அவதியடைந்து வருவதாக கடந்த வாரம் நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து கலெக்டர் உமா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக அங்கு இருசக்கர வாகனங்களை நிறுத்த பழையபடி, 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என ஒப்பந்ததாரர்கள் அறிவித்து போர்டு வைத்துள்ளனர்.இந்நிலையில், மீண்டும் வாகனங்களுக்கு விலையேற்றம் செய்யப்பட்டது. நாமக்கல் கலெக்டர் உத்தரவை, காற்றில் பறக்கவிட்டதை சுட்டிக்காட்டி நேற்று முன்தினம் நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, வாகனங்களுக்கு மீண்டும் நேற்றுமுதல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, டூவீலர் ஸ்டாண்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது.