மக்களிடம் டிபாசிட் பெற்று ரூ.76 லட்சம்மோசடி: நாமக்கல்லில் நிதி நிறுவனர் கைது
நாமக்கல், பொது மக்களிடம் டிபாசிட் பெற்று, 76 லட்சம் ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன அதிபரை, நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், மோகனுார், கங்காணிப்பட்டியை சேர்ந்தவர் பொன்வேலப்பன், 55; இவரது மனைவி வசந்தி, மகன் சரவணன், மகள் சசி மற்றும் மேலாளர்கள் வீரகுமார், பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து, நாமக்கல் சந்தைப்பேட்டைபுதுார் பிரிவு அருகே, 'பாலாஜி பைனான்ஸ்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளனர். இந்நிலையில், திடீரென முதிர்வு தொகையை கொடுக்காமல் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகினர்.இதுகுறித்து, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த சித்ரா, நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்துள்ளார். அதில், 300 முதலீட்டாளர்கள் இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றமடைந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.அதன்படி, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, தலைமறைவாக இருந்த நிதி நிறுவன அதிபர் பொன்வேலப்பன், நேற்று முன்தினம் போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், நடத்திய முதல்கட்ட விசாரணையில், அவர் நிதி நிறுவனம் நடத்தி, 76 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 'பாலாஜி பைனான்ஸ்' நிதி நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், நாமக்கல் - சேலம் சாலை முருகன் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில், நேரிடையாக வந்து, காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை, தங்களிடம் உள்ள அசல் ஆவணங்களை கொண்டு வந்து புகாரளிக்கலாம்' என, மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.