நிலுவை கடன்களை செலுத்த சிறப்பு திட்டத்தில் அவகாசம்
நாமக்கல் 'கூட்டுறவு வங்கியில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் சிறப்பு திட்டத்திற்கு, செப்., வரை கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், கூட்டுறவு சங்கங்களில், பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்ட கால கடன் பெற்று, 2022- டிச., 31ல் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம்-2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து இணைப்பு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு தவணை தவறி, 2023 மார்ச், 31 அன்றோ, அதற்கு முன்போ செயல்படாத ஆஸ்தி (என்.பி.ஏ.,) என வரையறுக்கப்பட்ட கடன்களை இத்திட்டத்தின் கீழ் தீர்வு செய்து கொள்ளலாம்.இச்சிறப்பு திட்டத்தின் கீழ், 9 சதவீதம் சாதாரண வட்டியுடன் மொத்தமாக, அரசு உத்தரவு வெளியிடப்பட்ட, 2025 ஜூன், 24 முதல், மூன்று மாதத்திற்குள், ஒரே தவணையில் செலுத்தி தீர்வு செய்து கொள்ளலாம். கடன்தாரர்கள், வட்டிச்சுமையை கணிசமாக குறைக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 9 சதவீதம் சாதாரண வட்டி விகிதத்தில், நிலுவை தொகையை செலுத்தி தங்களது கடன்களை தீர்வு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.