கொல்லிமலையை ரசிக்க சிறப்பு சுற்றுலா திட்டம்
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:கொல்லிமலை, நாமக்கல் மாவட்டத்தில், கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக, கடல் மட்டத்திலிருந்து, 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது, நாமக்கல் நகரத்திலிருந்து, 45 கி.மீ., தொலைவில் உள்ளது. சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், இக்கோடை காலத்தை இயற்கையுடன் இணைந்து கொண்டாட, மாவட்ட நிர்வாகம் சார்பில், வனத்துறை, சுற்றுலாத்துறை இணைந்து, இன்று முதல் வரும், ஜூன், 1 வரை, அனைத்து நாட்களிலும், 'சிறப்பு சுற்றுலா திட்டம்' நடத்தப்படுகிறது.இத்திட்டத்தில், நபர் ஒருவருக்கு, பயண கட்டணம் மட்டும், 300 ரூபாய். பயண கட்டணம், மதிய உணவு, மாலை சிற்றுண்டியுடன், 450 ரூபாய் செலுத்தினால், ஒரு நாள் சுற்றுலா சிறப்பு வாகனம் மூலம் அழைத்து செல்லப்படுவர். இச்சிறப்பு சுற்றுலா திட்டத்தின் பயணங்கள், காலை, 8:00 மணிக்கு செம்மேடு பஸ் ஸ்டாண்டில் தொடங்கி, மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோவில், பழங்குடியினர் நலச்சந்தை, கொல்லிமலை இயற்கை அங்காடி, சீக்கு பாறை வியூ பாயிண்ட், சேலுார் வியூ பாயிண்ட், அரப்பலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்கள் பார்வையிட்டு, மாலை, 5:40 மணிக்கு நிறைவடையும். இந்த கோடை சுற்றுலாவை, கொல்லிமலையின் இயற்கை அழகுடன் கண்டுகளிக்க, வனவர்கள் ஈஸ்வர், 7092311380, கோபி, 9789131707, வன காப்பாளர் புருசோத்தமன், 6383324098, மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன், 7397715684 ஆகியோர் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.