கிட்னியை விற்கும் அவல நிலையில் மக்கள் கதை அளந்து கொண்டிருக்கும் ஸ்டாலின்
சென்னை, 'நாமக்கல் மாவட்டத்தில், கிட்னியை ஏமாற்றி பறிப்பது குறித்து, உயர் நீதிமன்றம் மேற்பார்வையில், விசாரணை நடத்த வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில், விசைத்தறிகளில் பணியாற்றும் ஏழைத் தொழிலாளர்களை ஏமாற்றி, அவர்களின் சிறுநீரகங்களை, சில கும்பல் பறித்து செல்வதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. சிறுநீரகங்களுக்கு, 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலுார் மருத்துவமனைகளில், அவர்களின் சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநில பணக்காரர்களுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு, அவை பொருத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.இது குறித்து விசாரணை நடத்தப்போவதாக, நாமக்கல் மாவட்ட மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. ஒரு லட்சம் ரூபாய்க்காக சிறுநீரகத்தையே விற்கத் துணிகின்றனர் என்றால், அவர்களின் வாழ்க்கை நிலை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். இதையெல்லாம் அறியாமல், தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக, முதல்வர் ஸ்டாலின் கதை அளந்து கொண்டிருக்கிறார். சிறுநீரக திருட்டில், துறை ரீதியான விசாரணையில், நீதி கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில், உயர்நிலைக் குழு விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.