மேலும் செய்திகள்
பூட்டி கிடக்கும் கழிப்பறையை திறக்க கோரிக்கை
13-Oct-2025
குமாரபாளையம், குமாரபாளையம் நகராட்சி, சுந்தரம் நகர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஏற்கனவே இருந்த கழிவறையை அகற்றிவிட்டு, நவீன கழிப்பறை கட்டுவதற்காக, கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டது. அதன்பின், கட்டுமான பணி தொடங்கி, 15 மாதங்கள் கடந்தும் இதுவரை கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்கவில்லை. இதனால், பள்ளியின் வெளிப்புறம் திறந்தவெளியியை மாணவ, மாணவியர் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் அசவுகரியமடைந்த பெற்றோர், நகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்ட நவீன கழிப்பறையை திறக்க வலியுறுத்தி, நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று காலை, பள்ளிக்கு வந்த பெற்றோர் கழிப்பறை திறக்கப்படுமா? திறக்கப்படாதா? எனக்கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வகுப்பறையில் இருந்த தங்களுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு, குமாரபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் ரமேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள், நான்கு நாட்கள் கால அவகாசம் கேட்டுக்கொண்டதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
13-Oct-2025