பள்ளி விடுதியில் அடிப்படை வசதி கேட்டு மாணவர்கள் போராட்டம்
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த மங்களபுரம் அரசு பள்ளி மாணவர்கள் விடுதியில், அடிப்படை வசதி கோரி மாணவர்கள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான மாணவர் விடுதி உள்ளது. 36 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் மின் விசிறி, படுக்கை தலையணை, போதிய குடிநீர், சுகாதாரமான கழிவறை போன்ற வசதிகள் இல்லை எனவும், கழிவறையை மாணவர்களே சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவதாக புகார் கூறப்படுகிறது. முறையான அடிப்படை வசதிகள், தரமான உணவு கேட்டு நேற்று இரவு, 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வார்டன் தேவராஜ் மற்றும் போலீசார் மாணவர்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.