மண்புழு உரப்படுக்கைகள் மானியத்தில் வினியோகம்
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மண்புழு உரம் இடுவதால், மண்ணின் கட்டமைப்பு மேம்படுகிறது. மண்ணின் காற்றோட்டம் நீர்பிடிப்பு தன்மை மேம்படுகிறது. மண்ணில் கரையாத தாதுக்களை கரைய செய்து பேரூட்ட மற்றும் நுண்ணுாட்ட சத்துக்களை பயிர்களுக்கு சீரான அளவில் வழங்கி, பயிர் மகசூலை அதிகரிக்கிறது.விவசாயிகள் மண்புழு உரம் உற்பத்தியை ஊக்குவிக்க, 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில், 50 சதவீத மானியத்தில், 12 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரமுள்ள மண்புழு உரப்படுக்கை வழங்கப்படுகிறது.மண்புழு உரப்படுக்கையை நிறுவ மரக்குச்சிகள், மண்புழு உரம் உற்பத்தி செய்ய மண்புழுக்கள், தொழுஉரம் முதலியவற்றை விவசாயிகள் தன்னுடைய சொந்த செலவில் பெற்று பட்டியல்களை வழங்கினால், 1,500 ரூபாய் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். இத்திட்டத்தின் கூடுதல் மானியம், 3,000 ரூபாயாகும். விவசாயிகள் குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலமும், கால்நடை வைத்திருப்பவராக இருக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, இரு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய, தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகியும், உழவன் செயலியில் பதிவு செய்தும், செம்பாம்பாளையம், வையப்பமலை வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகியும் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.