ஜவுளி தொழில் முனைவோர் கலந்தாய்வு
குமாரபாளையம், தமிழக அரசு துணி நுால் துறை இயக்குனர் லலிதா தலைமையில், நாமக்கல் மாவட்ட ஜவுளி தொழில் முனைவோருக்கான கலந்தாய்வு கூட்டம் குமாரபாளையம் ஹை-டெக் பார்க்கில் நடந்தது. குமாரபாளையம், பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு பகுதிகளை சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்றனர். நுால் விலை கட்டுப்பாடு, ஜவுளி தொழிலுக்கு மின்சார மானியம், சோலார் சிஸ்டம் அமைக்க மானியம், உயர் தொழில் நுட்ப இயந்திரங்கள் அமைக்க மூலதன மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழில் முனைவோர் முன் வைத்தனர். மேலும், குமாரபாளையத்தில் சாயநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கேட்டுக்கொண்டனர்.நுாற்பாலைகள், விசைத்தறிகள் மற்றும் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் நவீன மயமாக்கலுக்காக தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மானியங்களுடன் கூடிய திட்டங்கள் பற்றி துணிநுால் துறை இயக்குனர் கூறினார். கரூர் மண்டல துணி நுால் துறை இணை இயக்குனர் அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்த இக்கூட்டத்தில், கரூர் மண்டல துணி நுால் துறை இணை இயக்குனர் தமிழ்செல்வி, முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் சம்பத்குமார், சிட்ரா விசைத்தறி பணி நிலைய பொறுப்பு அலுவலர் பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.