முடிவுக்கு வந்த பருத்தி சீசன் மீண்டும் ஜூலையில் வாய்ப்பு
ராசிபுரம், ராசிபுரம் சுற்று வட்டாரத்தில் அதிகளவு பருத்தி பயிரிடப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து பருத்தியை வாங்கி, ஏல முறையில் வியாபரிகளுக்கு, ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் விற்பனை செய்து வருகிறது. இப்பகுதியில், ஆர்.சி.எச்., சுரபி,, கொட்டு ரக பருத்திகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம், வெண்ணந்துார் அடுத்த அக்கரைப்பட்டி பகுதியில் ஆர்.சி.எம்.எஸ்., சார்பில் பருத்தி ஏலம் நடப்பது வழக்கம். கடந்த டிச.,ல் பருத்தி சீசன் தொடங்கியதால் விற்பனையும் தொடங்கியது. இந்நிலையில் சீசன் முடியும் சமயம் என்பதால், சில வாரங்களாக பருத்தி வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இதனால், மே மாதம் முதல் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. தற்போது முற்றிலும் பருத்தி சீசன் முடிந்துவிட்டது. இனிமேல், ஜூலை இரண்டாவது வாரத்தில் தான் பருத்தி சீசன் தொடங்கும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.