திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
திருச்செங்கோடு, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் புராண சிறப்பு பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இங்கு, வைகாசி விசாக தேர் திருவிழா, 14 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதில், மலைக்கோவிலில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீஸ்வரர், நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நேற்று, 9ம் நாள் நிகழ்ச்சியாக, அர்த்தநாரீஸ்வரர் மற்றும் வள்ளி, தேவசேனா, செங்கோட்டுவேலர் சுவாமிகளுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம், மஹா தீபாராதனை நடந்தது.கைலாசநாதர் ஆலயத்தில் நடந்த கல்யாண உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், அர்த்தநாரீஸ்வரர் பரிவாரங்களுடன் பக்தர்கள் புடைசூழ திருத்தேருக்கு எழுந்தருளினார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.