டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2ஏ தேர்வு;12,727 பேர் பங்கேற்பு; 3,382 பேர் ஆப்சென்ட்
நாமக்கல்:மாவட்டத்தில் நடந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-2, 2ஏ தேர்வில், 12,727 தேர்வர்கள் பங்கேற்றனர். 3,382 பேர் பங்கேற்கவில்லை.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு, தொகுதி-2, தொகுதி, 2ஏ, பதவிகளுக்கான போட்டித்தேர்வுகள், நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு தாலுகாவில் நேற்று நடந்தது. இத்தேர்வுக்காக, 55 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதற்காக, மாவட்டம் முழுவதும் இருந்து, 16,109 தேர்வர்கள் விண்ணப்பித்தருந்தனர். மேலும், தேர்வு கூடங்களுக்கு தேர்வர்கள் காலை, 6:00 மணி முதல் செல்வதற்கு ஏதுவாக அனைத்து தேர்வு கூடங்களுக்கும், பஸ் வசதி மற்றும் தேர்வு மையங்களில் தேவையான குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.இத்தேர்விற்கு, துணை கலெக்டர் நிலையில், ஆறு பறக்கும் படை அலுவலர்கள், டி.ஆர்.ஓ., நிலையில், 4 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தேர்வு பணிகள் கண்காணிக்கப்பட்டன. நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி, பி.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி, ப.வேலுார் கந்தசாமி கண்டர் கல்லுாரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, தேர்வு மையங்களில் பார்வைதிறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதி வருவதையும் பார்வையிட்டார்.நாமக்கல் மாவட்டத்தில், நேற்று நடந்த தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-2, 2ஏ போட்டித்தேர்வை, 12,727 பேர் பங்கேற்றனர். 3,382 தேர்வர்கள் பங்கேற்கவில்லை.