வாகனம் மோதி விபத்து; லாரி டிரைவர் உயிரிழப்பு
நாமக்கல்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அடுத்த காளிமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சந்திரன், 52; லாரி டிரைவர். இவர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜகுரு என்பவரின் லாரியை ஓட்டி வந்தார். இந்த லாரியை பெயின்ட் அடிப்பதற்காக, நாமக்கல் வள்ளிபுரத்தில் உள்ள ஒரு பட்டறையில் விட்டுள்ளார். அப்பணியை பார்ப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு சந்திரன், நாமக்கல் வந்துள்ளார். பின், நாமக்கல் - பரமத்தி சாலை, காவேட்டிப்பட்டியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், சந்திரன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்தவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.